நரையுடன் தொப்பையும் இலவசம்
2000இல் Medical Hypothesis எனும் ஆய்விதழ் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. இது முதியோரின் அதிக எடைக்கு முன்வைத்த கோட்பாடு Young Hunter Theory என்பது. இது வயதாக வயதாக ஏற்படும் எடை அதிகரிப்புக்கு ஒரு பரிணாமவியல் கோணத்தை அளிக்கிறது. இதன்படி, இளமையில் நீங்கள் அதிக வேலை செய்ய வேண்டும். காடோடியான நமது முன்னோடிகள் ஊர் சுற்றி, பாடுபட்டு வேட்டையாடியும், எதிரிகளுடன் போராடியும் உணவைப் பெற்றுச் சாப்பிட்டு, குழந்தைக்கும் இணைக்கும் அளித்திட மிக வலிமையாய் அதிக தசைகளுடன் இருக்க வேண்டும். ஆனால் வயதாக ஆக, உடல் மரணத்துக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்கிறது. அதனால்தான் அணுக்களை அது புதுப்பிப்பதில்லை. அப்போது நம் மூதாதையர்களால் கடுமையாய் அலைந்து திரிந்து வேட்டையாடி உணவைச் சேகரிக்க முடியாது. அது ஓய்வுக்கான காலம். அப்போது நீண்ட காலம் நாம் உணவின்றி இருக்க நேரிடும். தொடர்ந்து உழைக்க நேர்கிற நமது இளைய மூதாதைக்கு உடலில் குறைவான கொழுப்பு போதும். 3-4 வாரங்கள் தாக்குப்பிடிக்கப் போதுமான கொழுப்பு போதும். ஆனால் வயதான மூதாதைக்கு கூடுதலாக ஒன்றரை, இரண்டு மாதங்கள் உணவின்றித் தாக்குப்பிடிக்க நேரிடலாம். ஆகையால் உடல், தசைகளைவிடக் கூடுதலாய் கொழுப்பை சேகரிக்கிறது. இதனால்தான் நாற்பது வயதுக்கு மேல் நமக்கு எடை கூடுகிறது.
60-70 கிலோ எடையுடன் இருந்தவர் என்றால் உங்கள் எடை வேகமாய் அதிகரித்து ஒரு வருடத்துக்குள் 80-90 கிலோ அடைப்புக்குறிக்குள் நீங்கள் மாட்டிக்கொள்வதைக் கண்டு நீங்கள் அதிசயிப்பீர்கள். அத்துடன் எடை அதிகரிப்பின் (தொப்பையின்) விளைவாய் முட்டி, முதுகு வலிகள், ரத்தக் கொழுப்பு, ரத்த சர்க்கரை, விரைப்பிழப்பு, தொடர்ந்த அசதி போன்ற பிரச்சினைகளும் சூழ்ந்துகொள்ளும். மருத்துவர் உங்களது டயட்டை மாற்றி, தினமும் நடைபழகச் சொல்வார். விடிகாலையில் கால்சராய், ஸ்போர்ட்ஸ் ஷூ, மப்ளர் சகிதம் நீங்கள் வெளியே நடைபயிற்சிக்கு கிளம்புகையில் உங்களுடன் தெருவில், கடற்கரையில், பூங்காவில் உங்கள் வயதை ஒத்தவர்களை, உங்களைவிட மூத்த கிழவர்களைக் காண்பீர்கள். இளைஞர்களே இல்லாத விடிகாலை நடைபயிற்சியின் உலகம். அப்போதுதான் உங்களுக்கு நிஜமாகவே வயதான உணர்வு வரும்.
ஆனால் இதுவொன்றும் கல்லில் பொறிக்கப்பட்ட விதி அல்ல. நீங்கள் உணவைக் கட்டுப்படுத்திக் கடுமையாகப் பயிற்சி செய்தால் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஜிம்மில் சேர்ந்து எடை தூக்கிப் பயிற்சி செய்தால் மீண்டும் தசைகளைப் பெருக்க முடியும். ஆனால் இதற்கெல்லாம் நீங்கள் 200% கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டும். இளமையில் மூன்று மாதங்களில் தோன்றின தசைகள் இப்போது தலைதூக்க நீங்கள் ஆறில் இருந்து பத்து மாதங்கள் உழைக்க வேண்டும். இதனாலே நாற்பதினர் ஒரு கட்டத்தில் ஆர்வமிழந்து மெல்ல மெல்லச் சோர்ந்து போவார்கள். மிக அரிதாகவே 40-50 வயதுக்கு மேல் வலிமையாய், சிக்கென உடலை வைத்திருப்பவர்களைக் காண்கிறோம். வழக்கமான நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியன எடையை ஒரு அளவுக்குள் தக்க வைக்க உதவுமே அன்றி குறைக்க அல்ல. அதாவது 70-75 கிலோவுக்குள் நீங்கள் இருக்க அது உதவும். ஆனால் இளமையில் சாத்தியமான 60 கிலோவுக்கு இப்போது மீள முடியாது.
ஆனால் இன்று பதின் வயதினர்கூடப் பருமனாக மெதுவாக அசைந்து போகிறார்கள். இன்று இருபது வயதினர் கண்களில் களைப்பும் அதிக எடையுமாக அலுப்புடன் திரிகிறார்கள். இன்றைய முப்பதினருக்கு இளநரையும் தொப்பையும் வந்து நாற்பதினரைப் போலத் தெரிகிறார்கள். இதற்கான ஒரு காரணம் சமகாலத்தின் பிரதான கோளாறுகளின் தொகுப்பு: பரபரப்பு, நெருக்கடி, அழுத்தம், தூக்கமின்மை, அலைகழிப்பு, எதிர்காலம் குறித்த அச்சம், துரித உணவுகளின் பெருக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவை. அதாவது நாற்பது வயதினரின் நெருக்கடியும் சிக்கல்களும் இன்று பதின்வயதினருக்கே வந்துவிடுகின்றன.
இதைக் கல்லூரி ஆசிரியனாக நான் நேரடியாகக் காண்கிறேன். இன்றைய மாணவர்கள் என் காலத்தவர்களைப் போல இல்லை. அவர்கள் கூடுதல் முதிர்ச்சியும் பொறுப்புணர்வும், அவற்றின் எதிர்விளைவுகளான பதற்றமும் நெருக்கடியும் கொண்டிருக்கிறார்கள். என் காலத்தவர்களின் குழந்தைமையும், களங்கமின்மையும் மறைந்துவிட்டன. அவர்கள் குழந்தைகளாகவும் வளர்ந்து களைத்தவர்களாகவும் ஒரே சமயம் இருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் என்னிடம் வந்து மன அழுத்தம் பற்றித் தெரிவிக்காத மாணவர்கள் குறைவு. ஒவ்வொரு வகுப்பிலும் சிலராவது உளவியலாளரிடம் ஆலோசனைக்குப் போகிறார்கள்; மன அழுத்தம் குறைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள்; அல்லது சிகிச்சையின்றி மனநோயின் பிரச்சினைகளோடு போராடித் தளர்கிறார்கள். சுருக்கமாக, இன்று அனைவருக்கும் 10-20 வருடங்கள் கூடுதல் வயதாகிறது. இன்றைய 20ஐ 35 என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த இளையோரின் எடைப் பெருக்கத்துக்குத் துரித உணவை மட்டும் காரணமாகக் கூற முடியாது. உணர்வுகளே அதைவிட பிரதானமான காரணம். குறிப்பாய் மன உளைச்சல். 2000இல் Psychosomatic Medicine எனும் இதழில் வெளிவந்த ஆய்வு இதைக் குறித்துப் பேசுகிறது.
No comments:
Post a Comment