nutrients-for-pregnant-women கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday 31 August 2021

nutrients-for-pregnant-women கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்

 Femina

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் சரிவிகித உணவு உட்கொண்டால் தான் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இருப்பினும், உணவை பொருத்தமட்டில் எதை உண்ணலாம் எதை தவிர்க்கவேண்டும் என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம்.

போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகும். எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க வாய்ப்புண்டு. பிற்காலத்தில், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள்
கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளை மருத்துவர் பிநிதா பிரியம்பதா இவ்வாறு பட்டியலிடுகிறார்.

இரும்புச் சத்து: சிசுவிற்கு பிராணவாயு கொண்டுசேர்க்க இரும்புச்சத்து அவசியம். சிகப்பு இறைச்சி, பட்டாணி, காய்ந்த பட்டாணி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. மத்திய சுகாதரத்துறையின் பரிந்துரைப்படி பிரசவகாலத்தில் குறைந்தது 100 நாட்களாவது 100 மி.கி அளவு இரும்புச்சத்தும், 500 மி.கி ஃபோலிக் அமிலமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சுண்ணாம்புச் சத்து: உறுதியான எலும்புகள் மற்றும் பற்களுக்கு சுண்ணாம்புச் சத்து அவசியம். சீஸ், யோகர்ட், பால் மற்றும் மத்தி மீனில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 1,000 மி.கி அளவு சுண்ணாம்புச் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களின் உடல்நிலை பொறுத்து கேல்சியம் மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம்.
வைட்டமின் B6: கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச்சத்துகளை நமது உடல் சீராக பயன்படுத்த வைட்டமின் பி6 உதவும். பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, மீன், முட்டை, காய்கறிகள், வாழைப்பழம், முழுதானிய வகைகள் ஆகியவற்றில் வைட்டமின் பி6 காணப்படும். கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 1.9 மி.கி அளவு வைட்டமின் பி6 எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் D: சுண்ணாம்புச் சத்தை கிரகிக்க வைட்டமின் டி உதவும். ஆகையால், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் வளர வைட்டமின் டி தேவை. பால், மீன்கள் மற்றும் சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெறலாம். கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 0.015 மி.கி அளவு வைட்டமின் டி எடுத்துக்கொள்ள வேண்டும்
ஃபோலேட்: சிசுவின் உடலில் புரதம் மற்றும் ரத்தம் தயாரிக்க இந்த வைட்டமின் உதவும். மேலும், பிறவியில் ஏற்படும் நரம்பு மண்டலக் குறைபாடுகளை தவிர்க்க உதவும். கீரை வகைகள், கமலாப்பழச் சாறு, பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றில் அதிகம் காணப்படும். சிசுவிற்கு பிறவியில் ஏற்படும் நரம்புமண்டலக் குறைபாடுகளை தவிர்க்க பிரசவகாலத்தின் முதல் 12 வாரங்களில் 200 மி.கி ஃபோலேட் எடுத்துக்கொள்ள வேண்டும். நாளோன்றுக்கு 600 மி.கி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அயோடின்: தாய் மற்றும் சிசுவிற்கு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அயோடின் சத்து அவசியமாகும். இதன் மூலம், சிசுவின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் நன்றாக வளர்வதை உறுதி செய்ய முடியும். கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 250 மி.கி அளவு அயோடின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் A: கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 900 மி.கி (3000 IU) வைட்டமின் ஏ எடுத்துக்கொள்ள வேண்டும். சிசுவின் வளர்ச்சி, கண்பார்வை மற்றும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ பயன்படும். இறைச்சி, பீன்ஸ், கேரட், பறவை இறைச்சி, கீரை வகைகள் ஆகிய உணவுகளில் வைட்டமின் ஏ காணப்படுகிறது.
புரதம்: சிசுசின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. சிசுவின் திசுக்கள் மற்றும் மூளை வளர்ச்சி அடைய புரதச்சத்து உதவும். கர்ப்பப்பை திசுக்கள் மற்றும் மார்பகங்கள் வளர உதவுவதோடு கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்யும். கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 60-100 கிராம் புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, பறவை இறைச்சி, பீன்ஸ், சீஸ், டோஃபு, பால், கொட்டை மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.

No comments:

Post a Comment