தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன
தமிழ்நாட்டில் கடந்த 14 நாள்களாக தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணியுடன் தீவிர ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து 6 மணியிலிருந்து ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. தளர்வுகளுடனான இந்த ஊரடங்கு ஜூன் 14ஆம் தேத
ி காலை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் சற்று குறைவான தளர்வுகளும் பிற மாவட்டங்களில் அதிக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, பலசரக்கு கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
பாதிப்பு சற்று குறைந்த பிற மாவட்டங்களில் இறைச்சி கடைகள், எலக்ட்ரிக் கடைகள், ஹார்ட்வேர்டு கடைகள், டூவீலர் பழுது பார்க்கும் கடைகள், உதிரிபாகம் விற்பனை செய்யும் கடைகள், புத்தக கடைகள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டேக்சிகளில் பயணம் செய்வோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்களில் 30 சதவீதம் ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பத்திர பதிவு துறையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 50 சதவீத டோக்கன் கொடுத்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் டீ கடைகள், சலூன் கடைகள், துணிக்கடைகள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் எனப் பல்வேறு பணிகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து தொடங்கப்படவில்லை. ஏற்கெனவே தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment