மாம்பழ சீசனுக்கு தயாரா?
மாம்பழங்களின் உற்பத்தி பற்றியும், மா மரங்களை வளர்த்து பராமரிக்கும் விதம் பற்றியும், மாம்பழங்களின் தன்மைகள் பற்றியும் தர்மபுரி விவசாயி திரு.செல்லிமகன் நம்மிடம் பகிர்ந்துகொண்ட போது:-
‘‘தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் மா விளைச்சல் பரப்பளவு அதிகம். அவைகளுடன் ஒப்பிடும் போது சேலத்தில் மா விளைச்சல் பரப்பளவு குறைவுதான். ஆனால் சேலத்தில் பெரும்பாலும் ஏற்றுமதி ரக மாம்பழங்கள் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. நாங்களும் ஏற்றுமதி தரம் வாய்ந்த அல்போன்சா (வரகம்பாடி குண்டு), சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம் பசந்த் (முகலாய மன்னர் கண்டுபிடித்த ரகம்) போன்ற மாம்பழ
வகைகளை விளைவிக்கிறோம்.
சேலம் மாம்பழத்தின் அடையாளமாக இருந்தாலும் இது நம்ம ஊரு பழம் கிடையாது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள்தான் மாம்பழங்களை இங்கு அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். அதிலும் சேலம் வரகம்பாடி பகுதியில் உள்ள மண் மாம்பழ விளைச்சலுக்கு உகந்ததாக உள்ளது என்பதை அறிந்து இங்கு மாங்கன்றுகளை நட்டு அவர்கள்தான் வளர்த்திருக்கிறார்கள். அதன்பின்னர் மாம்பழ உற்பத்தி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. விவசாயிகள் பலரும் மா உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மா பரவி வளர்ந்திருக்கிறது. போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து ஆங்கிலேயர் மூலமாக நமது நாட்டுக்குள் மாம்பழங்கள் வந்ததாகவும் சொல்கிறார்கள்’’ என்கிற செல்லிமகன், மா மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பது பற்றியும் விவரித்தார்.
‘‘பொதுவாகவே மாமரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. ஆடி மாதம் நடவு செய்தால் ஐப்பசி மாதம் வரை மழை பெய்யும் என்பதால் அவ்வளவாக தண்ணீர்
தேவை இல்லை. மார்கழி, தை மாதங்களில் மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். அதன் பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்றே மாதங்களில் மாங்காய்கள் அறு வடைக்கு தயாராகி விடும். காய்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளித்து வர வேண்டும். நாங்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மருந்தான பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போன்றவற்றின் கரைசலையே தெளிக்கிறோம். நாங்கள் மாங்காய்களை சித்திரை மாதம் 1-ந் தேதி அறுவடை செய்ய தொடங்குவோம். இன்னும் அறு வடைக்கு இரு வாரங்களே உள்ளதால் அதற்கு தயாராகி வருகிறோம். மரத்தில் இருந்து பறிக்கப்படும் மாங்காய்கள் 3 நாட்கள் கழித்துதான் மஞ்சள் நிறத்துக்கு மாறும். இயற்கை முறையில் மாம்பழம் பழுக்க ஒரு வாரம் ஆகும். அப்படி இயற்கையாகவே பழுத்த பழம் தான் நல்ல ருசியாக இருக்கும். உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்காது. சிலர் உடனடியாக பழுக்கவைக்க ரசாயன கற்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அதனை வாங்கி சாப்பிடுபவர்களின் உடல் நலம் பாதிப்புள்ளாகிறது. நாங்கள் அறுவடை செய்யப்படும் மாங்காய்கள் அடிபடாமல் இருக்க, பெட்டிகளின் அடிப்பகுதிகளில் வைக்கோல்களை போட்டு நிரப்பி பேக்கிங் செய்கிறோம். அதனை சேலம் வரகம்பாடி மா உற்பத்தியாளர் விவசாய சுய உதவிக்குழு மூலம் விற்பனை செய்கிறோம். கோவை, சென்னை, திருச்சி
மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கிறோம். சேலத்து மாம்பழங்களை வெளிநாட்டவர்கள் விரும்பி சுவைக்கிறார்கள். எங்கள் தோட்ட மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் முயற்சி செய்து வருகிறோம்.
No comments:
Post a Comment