மாதவிடாய் குறித்து கற்றுத்தர வேண்டிய முக்கிய குறிப்புகள்!
இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம். உலகில் இருக்கும் அனைத்து பெண்களும் இது குறித்து நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஒவ்வொரு பெண்களும் பூப்படையும் காலம் முதலே அறிந்து வைத்திருப்பது அவசியம். பெண்கள் தங்கள் வாழ்நாளில் குறிப்பிட்ட வருடங்கள் வரை மாதவிடாய் நாட்களை சந்திக்கிறார்கள்.
இந்த நாட்களில் சுகாதாரம் பேணுவது மிகவும் முக்கியம். பல சமயங்களில் பெண்
உறுப்பை சுகாதாரமாக வைத்துகொள்ளாத போது உருவாகு ம் தொற்று கர்ப்பப்பை வாய்புற்று நோய் வரை கொண்டு செல்ல கூடும். அதனால் தான் ஆரம்ப காலம் முதல் அதாவது பெண் பிள்ளைகள் பூப்படைந்த காலம் முதலே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அப்படி பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் தேதி உலக மாதவிடாய் சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.
பெண் உறுப்பு சுத்தம்
பெண் குழந்தைகள் பிறக்கும் போதே அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருக்க பழகும் அம்மாக்கள், குழந்தைகள் வளர்ந்த பிறகும் அதை பழக்க வேண்டும். பெண் பிள்ளைகள் வளரும் போதே இது குறித்து விழிப்புணர்வோடு
இருக்க வேண்டும். பூப்படைந்த காலத்துக்கு பின்பு பெண் உறுப்பில் வெளிப்படும் வெள்ளை படுதலும், மாதவிடாய் குறித்த உதிர போக்கும் பெண் பிள்ளைகளுக்கு முன்கூட்டியே உணர்த்துவது அம்மாக்களின் கடமை.
பெண் உறுப்பு சுத்தம் வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் அந்த இடத்தை அதிகப்படியான சோப்பு கொண்டு செய்ய வேண்டியதில்லை. சுத்தமான நீரில் நன்றாக கழுவினாலே போதுமானது. மாதவிடாய் நாட்களின் போதும் வாடை நீங்க ஒரு வேளை மட்டுமே சோப்பு கொண்டு கழுவ வேண்டும். இதை நிச்சயம் ஒவ்வொரு பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை எல்லா காலங்களிலும் எல்லா வயதிலும் கூட பின்பற்ற வேண்டும். உலகளவில் சர்விகல் கேன்சருக்கு காரணங்களில் பெண் உறுப்பில் பரவும் கிருமித்தொற்றும் ஒரு காரணமாக இருக்கிறது.
உதிரபோக்கு பயன்பாடு
பூப்படைந்த காலத்துக்கு பிறகு பெண் பிள்ளைகளுக்கு இதை பயன்படுத்துவதிலேயே மிகுந்த குழப்பமும், ஒருவித சலிப்பும் வெறுப்பும், வெளியில் பேச வெட்கமும் உண்டாகும். மாதவிடாய் நாட்களில் ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஏற்ப உதிரபோக்கிலும் மாற்றம் இருக்கும். சிலருக்கு அதிகப்படியான உதிரபோக்கு இருக்கும். சிலருக்கு குறைவான அளவு இருக்கும். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அசெளகரியம் உண்டாகாத பொருளை பயன்படுத்துங்கள்.
முந்தைய காலத்தில் பருத்தி துணிகளை எட்டாக மடித்து உள்ளாடையில் வைக்கும் வழக்கம் இருந்தது. தற்போது நாப்கின், டேம்பன், மென்சுரல் கப், டேம்பன் என்று பல பொருள்கள் கிடைத்தாலும் நீங்கள் எதை
பயன்படுத்துகிறீர்களோ அதை தரமானதாக வாங்கி பயன்படுத்துங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும் தயங்கவேண்டாம். ஏனெனில் இதில் மென்சுரல் கப் திருமணத்துக்கு முன்பு இளம்பெண்கள் பயன்படுத்துவதில் சில சங்கடங்கள் உண்டு.
அவ்வபோது சுத்தம்
தற்போது பெண் பிள்ளைகள் வெகு விரைவில் வயதுக்கு வருவதால் மாதவிடாய் நாட்களை வலியுடனும் சிரமத்துடனும் கழிக்கிறார்கள்.மேலும் உதிரபோக்கு கண்டு அச்சம் கொண்டு அவ்வபோது அதை சுத்தப்படுத்தவும் தயக்கம் கொள்கிறார்கள். இவை மிகப்பெரிய ஆபத்தை எதிர்காலத்தில் உண்டாக்கும் என்பதை ஒவ்வொரு பெண்பிள்ளைகளும் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத்தருவது அம்மாக்கள் கடமை.
பள்ளிக்கு செல்லும் பெண்களும், வேலைக்கு செல்லும் பெண்களும் 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். அதே நேரம் ஓவ்வொரு முறை நாப்கின் மாற்றும் போது சுத்தமான நீரால் பெண்
உறுப்பை கழுவிய பிறகு நாப்கின் மாற்ற வேண்டும். இதே போன்று வேலைக்கு செல்லும் பெண்கள் மென்சுரல் கப் பயன்படுத்தினால் உரிய இடைவெளியில் அதை அகற்றி உதிரத்தை வெளியேற்றி மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment