இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது
கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து
வருவது வருத்தமளிக்கிறது. நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 26.4.2021 அதிகாலை 4.00 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன :
1. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
2. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட
அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.
தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
3. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
4. அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
5. அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
6. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.
7. கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,
மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.
8. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
9. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
10. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம்
50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.
No comments:
Post a Comment