நன்மை தரு கிர்ணி
ஜூஸ் நிறைந்த கிர்ணி பழம், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களிடையே புகழ் பெற்றிருக்கிறது. இதனால் உங்களுக்கு அழகான சருமமும் கிடைக்கும், பார்வைத்திறனுக்கும் உதவும். கோடையில் உண்பதற்கு ஏற்ற உணவாக இது ஏன் இருக்கிறது என்று கூறுகிறார் ராஜஸ்ரீ பலராம்
மேற்கத்திய நாடுகளில், கிர்ணி பழத்தை காண்டலூப்ஸ் என்று அழைக்கிறார்கள். கிர்ணி பழத்தின் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்றாலும், இந்த பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொண்டால், அதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள். கிர்ணி பழங்களில்,
வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன. அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டியின் ஊட்டச்சத்து துறை 2003 ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, வைட்டமின் ஏ மீட்டமைப்பின் மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறிந்தார்கள். இதற்கு வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதன் பிறகு, உலக உடல்நல அமைப்பு, நுரையிலின் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும், தலைசிறந்த உணவுகளில் கிர்ணி பழத்தை முதலாவதாக பட்டியலிட்டது. பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது.
“மிகமிகக் குறைவான கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு
பலனளிக்கக் கூடியது. இதன் ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கும் நல்லது,” என்கிறார் மும்பையைச் சேர்ந்த நியூட்ரிஷியனான வசுதா.
எப்படி தேர்ந்தெடுப்பது
கிர்ணி பழத்தை நன்றாகப் பார்த்து வாங்க வேண்டும்—பழுத்த கிர்ணி பழத்தை எளிதாக காம்பிலிருந்து பிரித்தெடுக்க முடியும். காம்பின் முனையில் நுகர்ந்து பார்க்கும்போது, பழ வாசனை வராவிட்டால், அது பழுக்காத கிர்ணிபழமாக இருக்கக் கூடும். அதே போல, கிர்ணி கிழே விழுந்து அடி பட்டிருந்தாலும், உள்ளே இருக்கும் பழத்திற்கு சேதம் இருக்காது.
கவனம் தேவை
கூடிய வரை, வெட்டிய உடனே கிர்ணி பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும். “பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டு விட்டீர்கள் என்றால், அதன் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்,” என்கிறார் வசுதா.
குழந்தைகளுக்கு ஜூஸ்
இந்த வெய்யில் சீசனுக்கு, குழந்தைகளுக்கு கிர்ணி ஜூஸை தினமும் கூட நீங்கள் கொடுக்கலாம். மிக்ஸியில் சிறு துண்டுகளாக இதை நறுக்கி, கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அடித்துக் கொடுக்கலாம். உடலை குளிர்ச்சியாக வைக்க இது உதவும்.
No comments:
Post a Comment