உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானதா?
'காலையில சாப்பிட எங்கே நேரம் இருக்கு... மதியம் ஒரு பிடி பிடிச்சிடுவேன்ல..!’ என்கிறவர்களில் பலர் நகரச் சூழலில் வாழ்பவர்கள். காலை உணவைக் கடமைக்காக அள்ளிப் போட்டுக் கொண்டு, பணியிடங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தலைதெறிக்க ஓடுபவர்கள். தவிர்க்கவே கூடாத ஒன்று காலை உணவு. அது ஒருபக்கம் இருக்கட்டும். வயிறுமுட்டச் சாப்பிடப் போகிறோம் எனக் கிளம்புகிற இவர்களின் மதிய உணவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே இன்னொரு பக்கம் எழுந்து நிற்கும் மிகப் பெரிய கேள்வி.
இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் மதிய உணவு திட உணவுகளே.
அதையும் வயிறுமுட்டச் சாப்பிடுவார்கள். லஞ்சுக்கு எதைச் சாப்பிடலாம், எதைத் தவிர்க்கலாம், எந்த உணவு செரிமானம் எளிதாக நடைபெற உதவும் என்று ஒரு அலசல்.
மதிய உணவில் சாப்பிட ஏற்றவை... கூடாதவை!
* பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில், அரிசியை சுத்தப்படுத்த பலவிதமான இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அரிசி வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைகளில் திரும்பத் திரும்ப பாலீஷ் செய்யப்படுகிறது. இந்த வகை அரிசியில் சத்துக்கள் எதுவும் இருக்காது. மாறாக, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் இரசாயனங்களே அதிகம் இடம்பெற்று இருக்கும். அதனால் இதைச் சமைத்துச் சாப்பிடுவதால் எந்தவிதப் பலனும் இல்லை.
* கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். உடலுக்குத் தேவையான சத்துகள் இயற்கையாகவே இதில் நிறைந்திருக்கின்றன. இதைச் சாப்பிடுவதால், உடல் வலிமை பெறும்.
* `வெரைட்டி ரைஸ்’ என்று நாம் செய்யும் புளியோதரையோ,
எலுமிச்சை சாதமோ, தக்காளி சாதமோ இவற்றில் சிறிது பூண்டு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். வெரைட்டி ரைஸ் சாப்பிடும்போது, அதன் வறட்டுத் தன்மையால் தொண்டையில் இறங்காமல் இருக்கும். இதன் காரணமாக, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வேண்டி இருக்கும். சாப்பாட்டுக்கு இடையில் தண்ணீர் குடித்தால், செரிமானம் சீராக இருக்காது. எனவே, கலந்த சாதம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் அருந்திவிடுவது நல்லது.
* வரகு, திணை, சிவப்பரிசி, கம்பு, ராகி போன்ற தானியங்களில் வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கிடைக்க வழிவகுக்கும்.
* `பசிக்கும்போது எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிடு’ என்பார்கள் பெரியவர்கள்.
அதுதான் நல்லது. ஆனால், நம் உடலுக்குத் தேவைப்படும் அளவைவிட உணவு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment